சென்னை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்துக்கான திட்ட அறிக்கை  தயார் செய்து மத்தியஅரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக  அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு செறு  அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தமிழ்நாடு கடல்சார் வாரியம் மூலம் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட துறைமுக அலுவலக கட்டிடத்தை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

இதைத்தொடர்த்நது,  அக்னி தீர்த்தம் ஓலைக்குடா சாலையில் தமிழ்நாடு கடல்சார் வாரியம் மூலம் படகு இல்லம், அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரை வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டப்பணிகளை  ஆய்வு  செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் இயக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக தற்போது ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன் கூடிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் ராமேஸ்வரத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு வருகிறது.

பாம்பன் கடலில் புதிய சாலை பாலம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் பாம்பன் பகுதியில் பல வீடுகள் சேதம் அடைய அதிக வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மாற்று பாதையில் புதிய பாம்பன் சாலை பாலம் அமைக்க திட்ட பணிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அத்துடன்  பாம்பன் கால்வாய் தூர்வாருதல் முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும்,  ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அப்துல் கலாம் நினைவிடம் பகுதியில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரை வரை 6 கிமீ தூரம் புறவழிச்சாலை அமைக்க மொத்தம் ரூ.150 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறுகிறது.

ராமேஸ்வரத்தில் ரூ.20 கோடியில் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மூன்று தளங்களுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் பணி முடிக்கப்பட்டு முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

இவ்வாறு கூறினார்.