‘சாஹோ’ படத்தைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது.

நாக் அஷ்வின் இயக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தீபிகா படுகோன், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாக பிரபாஸ் – நாக் அஷ்வின் படம் அமைந்துள்ளது.

சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார் .

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இன்று (ஜூலை 24) குரு பூர்ணிமாவை முன்னிட்டு, இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. முதல் நாளில் அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சியைப் படமாக்கினார்கள். இதனை க்ளாப் அடித்துத் தொடங்கிவைத்தார் பிரபாஸ்.

அமிதாப் பச்சன் நடித்த காட்சியைத் தொடங்கி வைத்தது குறித்து பிரபாஸ், “இந்த குரு பூர்ணிமா நாளில், இந்திய சினிமாவின் குருவுக்கு க்ளாப் அடிப்பது எனக்குக் கிடைத்த கவுரவம்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அதே போல் அமிதாப் பச்சன் முதல் காட்சி தொடக்கம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “‘ப்ராஜக்ட் கே’ படத்தின் முதல் ஷாட். தேசம் முழுவதும் உலகம் முழுவதும், பாகுபலி மூலம், சினிமாத் திரையில் மாய அலைகளை உருவாக்கிய உச்ச நடிகர் பிரபாஸ் க்ளாப் போர்ட் அடிக்க, அதன் பின்னால் இருப்பது எவ்வளவு பெரிய கவுரவம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ‘ப்ராஜக்ட் கே’ என்று பணிபுரிவதற்கான தலைப்பாக வைத்துள்ளார்கள். இது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 20-வது படமாகும்.

https://www.instagram.com/p/CRtAC5vhRZj/