சென்னை:
தீபாவளிக்கு வெளியாகும் எந்தவொரு படமும், சிறப்பு காட்சி ஓட்ட தியேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மீறி படத்தை ஓட்டினால், அந்த தியேட்டருக்கு சில் வைக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பபுர் ராஜூ பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். விஜய் படம் பிகில் வெளியாவதை மனதில்கொண்டே இந்த தடை போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தமிழகஅரசுக்கு எதிராக பல படங்களில் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிகில் படத்திலும் மாநிலஅரசுக்கு எதிராக பல கருத்துக்களை கூறியிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பிகில் படம் உள்பட எந்த படமும் தியேட்டர்களில் சிறப்புக்காட்சி ஓட்ட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இன்று கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக க செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் படங்களுக்கு அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் அதிகமாக வசூலிக்க படுவதாக பொதுமக்கள் புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், தீபாவளிக்கு வெளியாகும் பிகில் உள்பட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்றார்.
தமிழகஅரசின் உத்தரவை மீறி, அரசு அனுமதி அளித்துள்ள நேரத்தை தவிர்த்து, மற்ற நேரங்களில் திரைப்படங்கள் திரையிடப்பட்டால், திரையரங்குகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றவர், அந்த தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அமைச்சர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
இது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.