சென்னை:

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ். தாமரைச் செல்வியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து வந்த பேராசிரியர் முருகன்  ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ். தாமரைச் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன ஆணையை தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்  வழங்கினார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  பேராசிரியர் பணியில் 35 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்கும் பேராசிரியர் எஸ்.தாமரைச் செல்வி, தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளில் ஒன்றான எம்.ஐ.டி.யில் கணினி தொழில்நுட்பத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

குவைத் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புக்கான ஆய்வாளராக இருந்துள்ள இவர், கணினி பொறியியல் துறையில் 133 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 7 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ரூ. 29.11 கோடி மதிப்பிலான 11 ஆராய்ச்சித் திட்டங்களையும் இவர் செயல்படுத்தியிருக்கிறார்.

எம்.ஐ.டி. டீனாக 3 ஆண்டுகள், அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மாற்றத்துக்கான மைய இயக்குநராக 3 ஆண்டுகள், கல்விக் குழு உறுப்பினர், பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செயற்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்.

தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் இவர், பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியை வகிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.