சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுக என்ற இயக்கத்தில் அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அம்மா பேரவை சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

யாராலும் அசைக்க முடியாத எகு கோட்டையாக அதிமுக தற்போது இருக்கிறது. சாதாரண தொண்டர்கள் கூட பெருமைப்படும் இயக்கம் அதிமுக.  பழனிசாமி 4 ஆண்டுகள் முதல்வராக செயல்பட்டு இருக்கிறார். நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அதிமுக இயக்கம் இன்னும் பல ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட்டால் யாராலும் அதிமுகவை வெல்ல முடியாது. திமுக ஒரு தீய சக்தி. அதை அகற்ற வேண்டும்.

ஆட்சி மீது மக்களிடம் கெட்ட பெயர் இல்லை. நல்ல பெயர்தான் நீடிக்கிறது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். தொண்டர்கள் அதை நோக்கி செயல்பட வேண்டும். ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் அண்ணன்-தம்பி பிரச்சனைகள் இருந்தால் பேசி தீர்ப்போம். வெற்றிதான் இலக்கு என்று பேசினார்.