லாகூர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் மக்களவை தேர்தலில் இம்ரான் கான் போட்டியிட்டார். அப்போது அவர் தனது வேட்பு மனுவில் தனது குடும்பம், சொத்து உள்ளிட்ட தகவல்களை அளித்திருந்தார். அதை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஓப்புக் கொண்டு அவர் தேர்தல் மனுவை அங்கீகரித்தது. அதன் பிறகு நடந்த தேர்தலில் அவர் வென்று பிரதமர் ஆனார்.

இம்ரான் கானுக்கு பிரட்டனை சேர்ந்த அனாலூய்சா ஒயிட் என்பவர் மூலம் ஒரு மகள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் பெயர் டிரியன் ஒயிட் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்ரான் கான் தனது வேட்பு மனுவில் இது பற்றி குறிப்படவில்லை.  இதை அவர் வேண்டுமென்றே மறைத்ததாக லாகூர் நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “தனக்கு பிறந்த மகள் ஒருத்தி பிரிட்டனில் இருப்பதை இம்ரான் கான் மறைத்துள்ளார். இதன் மூலம் அவர் அரசியல் சாசனத்தின் 62 மற்றும் 63 ஆம் பிரிவுகளை மீறி உள்ளார். இந்த பிரிவில் நாட்டின் பிரதமர் நேர்மையானவராகவும் நெறி சார்ந்தவராகவும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆகவே இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்யவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

லாகூர் நீதிமன்றம் இந்த மனுவை நாளை விசராணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லமாபாத் உயர்நீதிமன்றத்தில் முன்பு இது போல ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தால் கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.