பிரயாக் ராஜ்
கவலைக்கிடமாக இருந்த ஒரு சிறுமியை தனி விமானம் மூலம் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற பிரியங்கா காந்தி அனுப்பி உள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் ஒரு இரண்டரை வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் பிழைப்பது கடினம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி செயலர் பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த சிறுமியின் நிலை குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராஜிவ் சுக்லா பிரியங்காவிடம் தெரிவித்து உதவி கோரினார்.
செய்தி அறிந்து பதறிப்போன பிரியங்கா காந்தி உடனடியாக ஒர் தனி விமானம் ஏற்பாடு செய்தார். அதில் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற அந்த சிறுமியையும் அவருடன் அந்த சிறுமியின் குடும்பத்தினரையும் உடனடியாக பிரியங்கா அனுப்பி வைத்துள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.