டெல்லி

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வயநாட்டில் ராகுல் காந்தி எம் பி ஆக இல்லாததை உணர விட மாட்டேன் என தெரிவித்துள்ளார்

மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்த முறை மொத்தம் 99 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை வென்ற கேரள மாநிலம் வயநாட்டு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

நேற்று  காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்தில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகவும், ரேபரேலியில் எம்பியாக தொடர்வதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி,

“வயநாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன். நான் கடினமாக உழைத்து, அனைவரையும் மகிழ்வித்து, நல்ல பிரதிநிதியாக இருக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். ரேபரேலி மற்றும் அமேதியுடன் எனக்கு மிகவும் பழைய உறவு உள்ளது. அதை உடைக்க முடியாது. ரேபரேலியில் உள்ள என் சகோதரனுக்கும் உதவுவேன். நாங்கள் இருவரும் ரேபரேலி மற்றும் வயநாட்டில் இருப்போம்”

என்று தெரிவித்துள்ளார்.