காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட சில நிமிடங்களில் உ.பி.தலைநகர் லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வண்ண வண்ண சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
ஒரு சுவரொட்டியில் இருந்த வாசகம் இது:
‘’இந்திரா காந்தி மீண்டும் வந்து விட்டார்’’
காங்கிரஸ் கட்சியின் ‘கிச்சன் காபினெட்’ட்டில் அமர்ந்து முக்கிய முடிவுகளை தீர்மானித்த பிரியங்கா நேரடி அரசியலில் இறங்கி விட்டார்.
மோடி,அகிலேஷ்,மாயாவதி ஆகிய மூவரின் தூக்கத்தையும் தொலைத்து விட்டது,பிரியங்காவின் அரசியல் பிரவேசம்.
பிரியங்காவுக்கு ராஜபாட்டை விரித்த பெருமை அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகிய இருவருக்குமே போய் சேரும்.அவர்கள் இருவருக்கும் காங்கிரஸ்தொண்டர்கள் முதலில் நன்றி கடிதம் அனுப்ப வேண்டும்.
உ.பி.யில் தேர்தல் உடன்பாடு கண்டுள்ள அகிலேஷும்,மாயாவதியும் இரண்டு தொகுதிகளை மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்க முடியும் என்று கறார் காட்டினார்கள்.
ஒன்று-சோனியா ஜெயித்த ரேபரேலி.மற்றொன்று ராகுல் வென்ற அமேதி.’இரண்டுக்கு மேல் எப்போதும் கிடையாது’’என்றுகூட்டணி கதவை சாத்திக்கொள்ள-நீண்ட நாட்களாக காங்கிரஸ் கைவசம் இருந்த துருப்பு சீட்டை –உ.பி.தேர்தல் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார் ராகுல்.
அந்த துருப்பு சீட்டு-பிரியங்கா.
பிரியங்காவின் இந்த நியமனம் ஒரு அபூர்வ நிகழ்வும் கூட
அவரது கொள்ளு தாத்தா மோதிலால் நேரு சரியாக நூறு வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்றார். 1919 –ல் மோதிலால் நேரு காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்றபோது அவருக்கு வயது-58.
பிரியங்காவுக்கு இப்போது வயது -47.
நேரடி அரசியல் தான் பிரியங்காவுக்கு புதிதே தவிர –தேர்தல் களம் புதிதல்ல.
தனது தந்தை ராஜீவ்காந்தி 1989-ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் நின்றபோது அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார்.அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசியல் நீரோட்டத்தை ஆழம் பார்த்தவர்.
அதன் பின்னர் தனது தாயாருக்காகவும், சகோதரருக்காகவும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் பிரச்சாரம் செய்துள்ளார்.
2019 –தேர்தலில் தான் முழு வீச்சில் சுழலப்போகிறார்.
வாரிசுகளை களம் இருக்கும் தலைவர்கள் ,வழக்கமாக தங்களின் கோட்டைகளில் தான்,அவர்களை இறக்கி விடுவார்கள்.ஆனால் பிரியங்காவுக்கு மிகப்பெரிய சவால் நிறைந்த ஏரியாவை கொடுத்திருக்கிறார் ராகுல்.
உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் கடந்த தேர்தலில் இரண்டு தொகுதியில், மட்டுமே வென்றது.காங்கிரஸ் கட்சியின் பாரம்பர்யம் மிக்க அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகள் அவை.
உ.பி.யில் அதிக தொகுதிகளில் வெல்லும் கட்சியே மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் என்ற சூழலில், 32 எம்.பி.தொகுதிகளை உள்ளடக்கிய உ.பி.கிழக்கு பகுதிக்கு அனுப்பட்டுள்ளார் பிரியங்கா.
பிரதமர் மோடியின் வாரணாசி, மற்றும் முதல்வர் யோகிஆதித்யநாத் வென்ற கோரக்பூர் ஆகிய தொகுதிகள் பிரியங்கா கட்டுப்பாட்டில் வருகின்றன.
பிரியங்காவின் பிரவேசம் உ.பி.யில் பெரும் மாற்றத்தை விளைவிக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இந்திரா காந்தியை நினைவூட்டும் முகம், பொது மக்களை ஈர்க்கும் வசீகரம் ,எளிமையான அணுகுமுறை என பிரியாங்காவுக்கு உள்ள பிளஸ் பாயிண்டுகள் எல்லாம் –வாக்குகளாக மாறும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
சோனியாவின் உடல் நலம் சரியில்லாததால் அவரது ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தெரிகிறது.
ஒரு த்ரில்லான விஷயம் என்ன தெரியுமா?
பிரியங்கா பொதுச்செயலாளராக நியமிக்க படப்போகிறார் என்ற விஷயத்தை யாரிடமும் பகிராமல் சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருந்தார் ராகுல்.
பிரியங்காவுக்கு முன்னால் அந்த பொறுப்பை கவனித்து வந்தவர் குலாம் நபி ஆஸாத்.அவருக்கு கூட ராகுல் ,இந்த நியமனம் குறித்து சொல்லவில்லை.
–பாப்பாங்குளம் பாரதி.