டில்லி:

உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  இன்னும் விருந்தினர் மாளிகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுனாரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா அருகே நிலத்தகராறில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.  “பாஜக ஆளும் மாநிலம் என்பதால் தங்களை எதுவும் செய்யமாட்டார்கள் என்ற நல்ல நம்பிக்கை கிரிமினல்களுக்கு இருக்கிறது. அதனால் தான் உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ராவில் பட்ட பகலில் 3 பெண்கள் உள்பட 9 பழங்குடியினத்தவர்களை கொன்று குவித்துள்ளார்கள்” என கடுமையாக சாடியிருந்தார்.

இதையடுத்து,  சோன்பத்ரா பகுதி மக்களை சந்திக்க நேரில் செல்ல இருப்பதாக அறிவித்த பிரியங்கா நேற்று வாராணாசிக்கு வருகை தந்தார். பின்னர் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி களுடன் சம்பவம் நடைபெற்ற சோன்பத்ரா பகுதிக்கு மிர்சாபூர் வழியாக செல்ல முயன்ற போருது, அவரது வாகனத்தை நடுவழியில் தடுத்து நிறுத்திய போலீசார் சோன்பத்ராவுக்கு செல்ல அனுமதியில்லை என்றனர். சோன்பத்ரா பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு போக அனுமதிக்க முடியாது என்று தடுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். அவருடன் காங்கிரஸ் நிரவாகிகளும் தர்ணாவில் ஈடுபட்டனர். தான் எப்படியும் அங்கு செல்வேன் என்று கூறியவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதில் இருந்து என்னை யாரும்  தடுக்க முடியாது என்றும் கூறினார்.

இதையடுத்து பிரியங்காவை கைது செய்த காவல்துறையினர் அருகில் உள்ள சுனார் விருந்தினர் மாளிகையில் தடுத்து வைத்தனர். இதன் காரணமாக கொதித்தெழுந்த காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலம் முழுவதும்  பிரியங்காவுக்கு ஆதரவாக  தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.

யோகி அரசு, பிரியங்கா காந்தி பிரபலமாவதை தடுக்கவே, அவரை கைது செய்து அடைத்துள்ளது என்று குற்றம் சாட்டி வருகின்றனர். பிரியங்கா காந்தி வாத்ரா உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத பிரச்சினைகளை தவறாமல் எழுப்பி வருவதாகவும், அவர் மக்களை நேரடியாக சந்தித்து வருவது  இயல்பானது என்று தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர், அவரை  தடுப்புக்காவல்  செய்திருப்பது, துரதிர்ஷ்டவசமானது மற்றும் சட்டவிரோதமானது என்று  கூறினார்.

ஆனால், மாநில  துணைமுதல்வர் பிரியங்கா காந்தி கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்து உள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி இன்னும் சுனார் விருந்தினர் மாளிகையில் இருந்து  விடுவிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இதன் காரணமாக உ.பி.யில் பதற்றம் நிலவி வருகிறது.