அமேதி:
காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, அமேதி மற்றும் ரேபரெலிக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை ஏற்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அமேதி காங்கிரசின் மாவட்ட பிரிவின் செய்தித் தொடர்பாளர் அனில் சிங், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அமேதி, ரேபரேலி மாவட்டங்களுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பட்டியலை தனக்கு வழங்குமாறு பிரியங்கா காந்தி ரயில்வே துறையினரிடம் கேட்டுள்ளார்.
சிறப்பு ஷ்ராமிக் ரயில் கடந்த வியாழக்கிழமை அமேதி ரயில் நிலையத்திற்கு 1,212 உத்தரபிரதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் வந்துள்ளது. அதில் 282 அமேதியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இங்கு திரும்புவோருக்கு டிக்கெட் கட்டணம் மற்றும் முகவரிகள் குறித்த விவரங்களை வழங்குவதற்காக கட்சியின் மாவட்ட பிரிவுத் தலைவர் பிரதீப் சிங்கால் ஹெல்ப்லைன் எண்களையும் வெளியிட்டுள்ளார் என்று அனில் சிங் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மே 4-ம் தேதி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைத்து வருவதற்கான செலவை தனது கட்சி ஏற்று கொள்வதாக அறிவித்தார். அதன் பிறகே சிங்கால் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டார் என்றும் அனில் சிங் கூறினார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரின் ரயில் பயணச் செலவை மாநில காங்கிரஸ் ஏற்கும் என்று காங்கிரஸ் கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தது.
இது குறித்த காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவர் சோனியா காந்தி, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்த தொழிலாளர்களுடன் தோளோடு தோள் கொடுப்பதில் காங்கிரஸின் தாழ்மையான பங்களிப்பு இதுவாகும் என்று கூறியிருந்தார்.