பிரக்யராஜ்:
‘கங்கா யாத்ரா’ என்ற பெயரில் 3 நாட்கள் கங்கையில் படகு பிரசாரம் மேற்கொள்கிறார் பிரியங்கா காந்தி. இதை காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவை திரட்டும் வகையில் கங்கை நதியில் படகுகள் மூலம் 3 நாட்கள் பிரசாரம் செய்து மக்களிடம் ஓட்டு வேட்டையாடுகிறார் பிரியங்கா காந்தி.
உ.பி.மாநில கிழக்கு பகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி.யில் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.
பிரியங்காவின் அதிரடி நடவடிக்கைகள் பாஜகவினருக்கு கிலியை ஏற்படுத்தி வரும் நிலையில், மாநில காங்கிரசாரிடையே பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் வேடபாளருக்கு ஆதரவாக, முதன்முறையாக கங்கை நதிக்கரையில் வசிக்கும் மக்களிடையே வாக்குகள் சேகரிக்கும் வகையில் படகு பயணம் செய்து தேர்தல் பிசாரத்தை மேற்கொள்ள உள்ளார் பிரியங்கா காந்தி.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜேந்திர திரிபாதி, உ.பி.யில் கங்கை நதிக்கரையில் மூன்று நாட்கள் படகு பயணம் மேற்கொண்டு பிரியங்கா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். நதிக்கரை வழியாக பிரசாரம் செய்யும் முதல் தலைவர் பிரியங்கா காந்திதான்.
அவர் வரும் 18-ம் தேதி பிரயாகராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி 140 கி.மீ. தூரம் படகில் பயணித்து அங்குள்ள கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். ‘கங்கா யாத்ரா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி வாரணாசியின் அஸி காட் வரை செல்கிறார் என தெரிவித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் சார்பில் பிரியங்கா கங்கை படகு பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.