சிக்ராய்
மோடி அரசு மக்கள் நலனை விட ஆட்சியில் நீடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகப் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார் .
நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள சிக்ராய் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.
பிரியங்கா காந்தி தனது உரையில்,
“பாஜகவும் மோடியும், ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதுதான் ஒரே இலக்கே தவிர. மக்கள் நலன் அல்ல. தங்களை வலுப்படுத்திக் கொள்வதில்தான் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது.
பாஜகவுக்கு ஏழைகளின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து மிகப்பெரிய தொழிலதிபர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் கொள்கையாக உள்ளது.. ராஜஸ்தான் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்..
பொது நலத் திட்டங்களைக் காங்கிரசின் சேவை மற்றும் இரக்கம் சார்ந்த அரசியல் மூலம்தான் செயல்படுத்த முடியும். பாஜக ஏன் வளர்ச்சி குறித்துப் பேசுவதற்கு பதிலாக மதம் மற்றும் சாதி குறித்துப் பேசுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”
என்று தெரிவித்துள்ளார்.