லக்னோ
காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து மட்ட தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் பிரியங்கா காந்தி ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் அம்மாநில வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய உதவும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கிணங்க அவர் நேர்காணலை நடத்தினார்.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி தன்னை மட்டுமே கட்சி நம்பி இருக்க வேண்டாம் எனவும் தான் ஒருவர் மட்டும் எவ்வித அதிசயமும் செய்ய முடியாது என்வும் தெரிவித்திருந்தார். தற்போது அதற்கிணங்க பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தான் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடும் முன்பாகவே அனைத்து மட்ட தொண்டர்களையும் ஒருங்கிணக்க வேண்டும் என அவர் செயல்பட்டு வருகிறார்.
அதை ஒட்டி லக்னோவில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் பிரியங்கா அனைத்து தலைவர்களையும் ஒவ்வொருவராக சந்தித்து வருகிறார். மாவட்ட வாரியாக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து அம்மாவட்ட விவகாரங்கள் குறித்து அவர் விவாதித்து வருகிறார். அத்துடன் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களையும் சந்தித்து விவரம் கேட்டு அறிகிறார்.
அதைத் தவிர இந்த சந்திப்பின் போது தனது பிரசார திட்டம் குறித்தும் அவர் தலைவர்களுடன் விவாதித்து வருகிறார். அத்துடன் தம்மை மட்டுமே காங்கிரசின் வெற்றிக்கு முழுமையாக நம்பக்கூடாது எனவும் அனைத்து தலைவர்களும் ஒருங்கிணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனவும் ஒவ்வொரு சந்திப்பிலும் வலியுறுத்தி வருகிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம் தொண்ட்ர்களின் ஆதரவு இல்லாதது என கூறப்படுகிறது. அதை முழுமையாக புரிந்துக் கொண்ட பிரியங்கா காந்தி மூன்று சட்ட மன்ற தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை மத்தியிலும் பெற வேண்டும் என பணி ஆற்றி வருகிறார்.