ரேபரேலி

பாஜக அரசு மக்களுக்குச் சேவை  செய்வதை மறந்து விட்டு பெரிய தொழிலதிபர்களுக்காகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

ற்போது உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது.  மொத்தம் உள்ள 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்டம் முடிந்துள்ளது.  மாநிலம் எங்கும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அவ்வகையில் ரேபரேலி ஜகத்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் பொது செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

தனது உரையில் பிரியங்கா காந்தி,

“மக்கள் மதம் மற்றும் சாதியைப் பயன்படுத்தி ஓட்டுக்களைப் பெறுபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.  பாஜக தலைவர்கள் மக்களுக்குச் சேவை செய்யும் தங்கள் கடமையை மறந்துவிட்டு வாக்குகளுக்காக மக்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

பாஜக அரசு மக்களுக்குச் சேவை செய்யும் ராஜ தர்மத்தை மறந்து விட்டனர். பெரிய தொழிலதிபர்கள் மட்டும்தான் அவர்களுக்குத் தேவை. அரசு இயந்திரம் அவர்களுக்காகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.   தற்போது காஸ் சிலிண்டர், கடுகு எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. அதாவது தினசரி சம்பளம் ரூ.200 ஆகவும் கடுகு எண்ணெய் விலை ரூ.240 ஆகவும் இருக்கிறது.

ரூ.14000 கோடி கரும்பு விவசாயிகளின் மொத்த நிலுவைத் தொகை உள்ள நிலையில் பிரதமர் மோடி ரூ.16,000 கோடி மதிப்பிலான 2 விமானங்களை தனக்காக வாங்கியுள்ளார். அவர் அதில் உலகம் சுற்றுவாரே தவிர விவசாயிகளின் நிலுவைத் தொகையை செலுத்த மாட்டார்.  சில ஆண்டுகளாக பாகிஸ்தான் உட்படப் பல நாடுகளுக்குப் பிரதமர் சென்றுள்ளாரே தவிரப் போராட்டம் நடத்தும் விவசாயிகளைச் சந்திக்க செல்லவில்லை.”

எனக் குற்றம் சாட்டி உள்ளார்.