லக்னோ: போலிசார் என் கழுத்தை நெரித்தனர், நான் கீழே தள்ளப்பட்டேன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி பரபரப்பு புகார் கூறி இருக்கிறார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நகரிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி என்பவர் கைது செய்யப்பட்டார்.இந் நிலையில், கைது செய்யப்பட்ட தாராபுரி, சதாப் ஜாபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க காங்கிரஸ் பொது செயலாளர் ப்ரியங்கா காந்தி லக்னோ சென்றார்.
ஆனால், உ.பி. போலீசார் ப்ரியங்கா காந்தியை வழியிலேயே தடுத்து நிறுத்தினர். அவரை பெண் போலிசார் ஒருவர் கழுத்தை நெரித்து முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் அங்கு திடீர் பதற்றம் உருவானது.
ஒரு கட்டத்தில் அவரை பிடித்து போலிசார் கீழே தள்ளினர். அதன் பிறகு, அவர் கட்சி உறுப்பினர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் நடந்த சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் ப்ரியங்கா காந்தி விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற போது நான் தடுத்து நிறுத்தப்பட்டேன்.
எனது கழுத்தை நெரித்து போலிசார் தள்ளினர். நான் கீழே விழுந்துவிட்டேன். அதன் பின்னர் கட்சி உறுப்பினர் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டேன் என்று பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.
போராடி கைதாகி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்ற ப்ரியங்கா காந்தியை போலிசார் தடுத்து நிறுத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தின் போது போலிசாரின் நடவடிக்கைகளை கண்டித்து காங். தொண்டர்கள் முழக்கமிட்டனர்.