புதுடெல்லி:
உ.பி. அரசு விளம்பரத்தில் கொல்கத்தா பாலம் இடம் பெற்ற சர்ச்சை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் கீழ் அடையும் மாற்றங்கள் என்ற தலைப்பில் அம்மாநில அரசு, நாளிதழ் ஒன்றில் இன்று முழுப்பக்கம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், 2017ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச மாநிலம் வளர்ச்சி அடையவில்லை என்றும் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்த மாநில உற்பத்தியில் இந்திய அளவில் உத்தரப் பிரதேசம் 2வது இடத்தில் இருப்பதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மா மேம்பாலம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள கட்டிடமும் மேற்கு வங்கத்தில் உள்ள உணவகம் கட்டிடம் ஆகும். மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிபோல் உத்தரப் பிரதேச அரசு காட்டுவதாக சமூக ஊடகத்தில் பலரும் விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர்.
உ.பி. அரசு விளம்பரத்தில் கொல்கத்தா பாலம் இடம் பெற்ற சர்ச்சை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பதே அவர்களின் வேலை. போலி கணக்காளரை உருவாக்கி, இப்போது மேம்பாலம் மற்றும் தொழிற்சாலைகளின் போலிப் படங்களை வைத்து அபிவிருத்தியின் பொய்யான கோரிக்கைகளை முன்வைத்து உ.பி.யின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பொய் சொன்னார் என்றும் அவருக்கு பொதுமக்களின் பிரச்சனைகள் பற்றிய புரிதல் இல்லை என்றும், பொய்யான விளம்பரங்கள் மட்டுமே அவர்களிடம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.