டில்லி

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி இஸ்ரேல் போரைச் சர்வதேச நாடுகள் தலையிட்டு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடும் போர் நிகழ்ந்து வருகிறது.  இதனால் பாலஸ்தீனத்தில் இனப் படுகொலைகள் நடப்பதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போரைத் தொடர்வதில் ஆர்வம் காட்டுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில்,

”தற்போது பாலஸ்தீனத்தில் நடந்து வரும் தாக்குதல் மிகக் கொடூரமானது.  இதில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் குழந்தைகள் உட்பட 10,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல நூறு குடும்பங்கள் அகதிகளாகிவிட்டன

.வெடிகுண்டுகள் மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது வீசப்படுகின்றன.  அகதி முகாம்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றன. சுதந்திர உலகின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்கள் பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் இந்த இனப்படுகொலைக்கு நிதி வழங்கி, ஆதரவளித்து வருவது வெட்கக்கேடானது.

சர்வதேச நாடுகள் குறைந்தபட்ச நடவடிக்கையாக உடனடியாக இஸ்ரேலில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உடனடியாக  இதனைச் செய்யாவிட்டால் எவ்வித தார்மிக அறமும் இல்லாமலாகிவிடும்”

என்று பதிந்துள்ளார்.