நாகப்பட்டினம்:

நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று நடைபெற்ற சிறப்பு வகுப்பின்போது, மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகளை விடுமுறை நாட்களில் நடத்தி வருகிறது.

இதை தடுக்க அரசும், கல்வித்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முயற்சி செய்யாத நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் இன்று பிளஸ்2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

இன்றைய  சிறப்பு வகுப்பின் போது, 12ம் வகுப்பு மாணவர் சந்தோஷ்குமார் மற்றும் கோகுல் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறி, அதைத்தொடர்ந்து, சந்தோஷ்குமார் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்த கோகுலை குத்தி உள்ளார்.

இதில் காயமடைந்த கோகல் உடனடியாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து செய்தியறிந்த போலீசாரும், பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில் குவிந்துள்ளனர்.

[youtube-feed feed=1]