திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் நீட்டிக்கப்பட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட 72 வழித்தடங்களில் தனியார் பேருந்து சேவைகளை இயக்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதன் முதல்கட்டமாக தெற்கு சென்னையில் ஒன்பது வழித்தடங்களிலும், வடக்கு சென்னையில் இரண்டு வழித்தடங்களிலும் 11 வழித்தடங்களுக்கு தனியார் பேருந்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

1. ஆதம்பாக்கம் ரயில் நிலையம் முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை

2. ஈச்சங்காடு முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையம் வரை

3. மடிப்பாக்கம் கூட் ரோடு முதல் கைவேலி வரை

4. ராஜிவ் காந்தி சாலையில் காரப்பாக்கம் முதல் துரைப்பாக்கம் வரை

5. துரைப்பாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை

6. கோவிலம்பாக்கம் முதல் காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வரை

7. DLF ராமாபுரம் முதல் போரூர் டோல் கேட் வரை

8. போரூர் செட்டியார் அகரம் முதல் ஆழ்வார்திருநகர் ஆவின் வரை

9. வளசரவாக்கம் லாமெக் பள்ளி முதல் போரூர் மீனாட்சி ஜெனரல் ஆஸ்பத்திரி வரை

10. நொளம்பூர் முதல் பருத்திப்பட்டு செக் போஸ்ட் வரை, மற்றும்

11. அம்பத்தூர் டன்லப் பேருந்து நிலையம் முதல் பம்மாத்துக்குளம் பேருந்து நிலையம் வரை

என மொத்தம் 11 வழித்தடங்களில் தனியார் மினி பஸ் சேவைகள் தற்போது துவங்கியுள்ளது.

புதிய விரிவான திட்டம் 2024 மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் கீழ் மினி பேருந்தின் கட்டணத் திருத்தம் என்ற தலைப்பில் உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்ட பின்னணியில், சிறிய பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கி சென்னை ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக, தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களுக்கு விண்ணப்பித்த நிலையில் தற்போது சென்னையில், சென்னை மாநகராட்சியின் பேருந்து வழித்தட சாலை அதிகாரிகள், சாலையை ஆய்வு செய்து, வழித்தட சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டு, எந்த வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியருக்கு விவரங்களை வழங்கிய பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படையில், சென்னை கலெக்டர் அலுவலகம் தெற்கு சென்னையில் 39 வழித்தடங்களையும், வடக்கு சென்னையில் 33 வழித்தடங்களையும் அடையாளம் கண்டுள்ளது.

அதேவேளையில் மத்திய சென்னையில் மினி பஸ் போக்குவரத்து குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாதது குறித்தும் ஏற்கனவே வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து ஹாரிங்டன் சாலை, லயோலா கல்லூரி மற்றும் அசோக் பில்லர் ஆகிய இடங்களுக்கு இயங்கிவந்த M5, M6, M20 ஆகிய மினி பேருந்து வழித்தடங்களில் பேருந்து இயக்குவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாதது அப்பகுதி மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.