சென்னை:
தமிழகத்தில் நாளை முதல் தனியார் நிறுவனங்களின் பால்களின் விலை உயர்த்தப்படுகிறது. லிட்டருக்கு ரூ.2 வரை உயரும் என தெரிகிறது.
தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இது தவிர ஆரோக்யா, ஹெரிடெஜ், கோமாதா, டோட்லா, ஜெர்சி என பல தனியார் பால்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 வரை குறைவாக விற்கப்படுகிறது. அதனால் மேலும் பால் கெடாமல் இருக்க ரசாயணம் கலக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக ஆவின் பாலுக்கு கிராக்கி அதிகம். ஆனால் போதுமான அளவு கிடைப்பபதில்லை.
இதன் காரணமாக தனியார் நிறுவனங்களின் பாலும் அமோகமாக விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், கொள்முதல் விலை உயர்வால், பால் விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தனியார் பால் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. அதன்படி நாளை முதல் ஆரோக்யா, ஹெரிட்டேஜ் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆவினுக்கு பால் சப்ளை செய்யும் பால் முகவர்களும், தங்களுக்கும் பால் விலை உயர்த்தி தர வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதன் காரணமாக ஆவின் பாலும் விரைவில் விலை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.