சென்னை:
நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவக்கல்வி கட்டணத்தை முறைப்படுத்த சட்டம் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நிகர்நிலை நிறுவனம் என்பதாலும், தமிழக அரசு இயற்றிய கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் கீழ் நிகர்நிலை நிறுவனங்கள் வராது என்பதாலும் அக்கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
annamalai-ramdos
ஏழைகளும் மருத்துவம் பயில வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு இத்தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தனியாரிடம் இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த 2013-ஆம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக அரசால் தான் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் அண்ணாமலை பல்கலைக் கழகமும், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும் அரசு நிறுவனங்களாகவே கருதப்பட வேண்டும்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு 11,500 ரூபாயும், பல் மருத்துவப் படிப்புக்கு 10,500 ரூபாயும் மட்டுமே ஆண்டு கல்வி கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மட்டும் மருத்துவப் படிப்புக்கு ரூ.5.54 லட்சமும், பல்மருத்துவப் படிப்புக்கு ரூ.3.40 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட சுமார் இரு மடங்கு அதிகம் என்பதால் தான், அதை குறைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என்று  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இக்கோரிக்கைக்காக  மருத்துவ மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இரு வினாக்கள் எழுந்துள்ளன.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை முழுக்க முழுக்க அரசுப் பல்கலைக்கழகமாக ஏன் மாற்றக்கூடாது?
தமிழகத்தில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் 1992-ஆம் ஆண்டின் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் (கட்டாய நன்கொடைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் ஏன் கொண்டுவரக்கூடாது? என்பன தான் அந்த இரு வினாக்கள்.
அரசு பல்கலைக்கழகமாக மாற்றினால் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டியிருக்கும்; அதனால் பல்கலைக்கழகத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்பது தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை முழுக்க அரசு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு தடையாக உள்ளது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 20 மருத்துவக் கல்லூரிகளும், 13 பல்கலைக்கழகங்களும் அரசால் நடத்தப்படுகின்றன.
இதற்காக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடியை செலவிடுகிறது. அத்துடன் ஒப்பிடும்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் செலவிடும் தொகை மிகவும் குறைவாகும். எனவே, அந்த இரு கல்வி நிறுவனங்களையும் அரசு நிறுவனங்களாக்கி கட்டணத்தை குறைக்க வேண்டும்.
மற்றொருபுறம் தமிழகத்திலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில்  நன்கொடை மற்றும் கல்விக் கட்டணம் என்ற பெயரில் மிகப் பெரிய கொள்ளை நடந்து கொண்டிருக்கும் போது, அதை தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் (கட்டாய நன்கொடைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் தடுக்க முடியாது என்று கூறி தமிழக அரசு ஒதுங்கி நிற்பது முறையல்ல.
தமிழ்நாட்டில் மொத்தம் 10 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. அக்கல்லூரிகளில் மொத்தம் 1500  இடங்கள் உள்ளன. அவற்றில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இராஜா முத்தையா கல்லூரியில் மட்டும் தான் 150 இடங்களுக்கு முறைப்படி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு  மாணவர் சேர்க்கை  நடக்கிறது. மற்ற கல்லூரிகளில் பணத்தின் அடிப்படையில் தான்  அனைத்தும் தீர்மானிக்கப்படு கின்றன.
சில பல்கலைக்கழகங்களில் மருத்துவப்படிப்புக்கு கட்டாய நன்கொடையாக ரூ.50 முதல் 75 லட்சம் வரையிலும், ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.15 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரையிலும் வசூலிக்கப் படுகிறது. ஒரு மாணவர் மருத்துவம் படிக்க ரூ.1.25 கோடி முதல் ரூ.1.80 கோடி வரை கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.
இவை தவிர மற்ற வசதிகளுக்காக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது.
ramdos
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 1350 மருத்துவ இடங்களைக் காட்டி ஒவ்வொரு ஆண்டும் ரூ.2025 கோடி கட்டணக் கொள்ளை நடக்கிறது.
இதைக் கொண்டு குறைந்தது 10 மருத்துவக் கல்லூரிகளாவது புதிதாக கட்ட முடியும். ஆனால், இக்கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டிய தமிழக அரசு இந்த கொள்ளைக்கு துணை போய் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பல தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2.25 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைக் கொண்டு  அந்த கல்லூரிகள் சிறப்பான கல்வி வழங்கும்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மட்டும்  ரூ.21 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பது மிகப் பெரிய மோசடியாகும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை…
இந்திய மருத்துவக் குழுவுக்குத் தான் உள்ளது என்பதை எற்க முடியாது. மாநில அரசு சட்டம் கொண்டு வந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்க முடியும்.
தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் உண்டு என சி.பி.எஸ்.இ நிர்வாகம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை முழுமையான அரசு பல்கலைக்கழகமாக அறிவித்து இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் (கட்டாய நன்கொடைத் தடுப்பு) சட்டத்தில் திருத்தம் செய்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுவது போன்று, நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளுக்கும் அரசு குழுவே கட்டணம் நிர்ணயிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வா கூறப்பட்டுள்ளது.