தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர விடுதிகளுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

Must read

புதுடெல்லி:
னியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தேசிய தடுப்பூசி வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு முரணானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மனோகர் அகானி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதிய கடிதத்தில், “சில தனியார் மருத்துமனைகள், சில நட்சத்திர விடுதிகளுடன் இணைந்து தடுப்பூசி முகாம் நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்தன.இது தேசிய தடுப்பூசி்த் திட்டத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது.

கொரோனா தடுப்பூசி விதிகளின்படி 4 வழிமுறைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தலாம், தனியார் மருத்துமனைகளில் தடுப்பூசி செலுத்தலாம், அரசு அலுவலகங்களில் பணியாளர்களுக்கு தடுப்பூசி முகாமை அரசு மருத்துவமனைகள் மூலம் செயல்படுத்தலாம், தனியார் நிறுவனங்களில் தடுப்பூசி முகாமை தனியார் மருத்துவமனைகள் மூலம் செயல்படுத்தலாம் இந்த 4 வாய்ப்புகள் மூலம் மட்டுமே தடுப்பூசி முகாம் நடைபெற வேண்டும்.

இது தவிர முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு குடியுருப்புச் சங்கங்கள் மூலம் வீட்டின் அருகே தடுப்பூசி முகாமை அரசு சார்பில் அமைக்கலாம். இது தவிர சமுதாயக்ககூடம், பஞ்சாயத்து அலுவலகம், கல்லூரிகள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் அரசு சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தலாம். மற்ற எந்த வகையிலும் தடுப்பூசி முகாமை செயல்படுத்த அனுமதியில்லை.

இந்த விதிமுறைகளை மீறி நட்சத்திர விடுதிகளுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி முகாம் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இது தேசிய தடுப்பூசி திட்டத்தின் விதிகளுக்கு முற்றிலும் முரணாகச் செயல்படுவதாகும். அவ்வாறு செயல்படும் நட்சத்திர ஹோட்டல்கள், தனியார் மருத்துவமனைகள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற எந்த தடுப்பூசி முகாம்களும் ஹோட்டல்களில் நடக்காமல் இருக்கவும், தேசிய தடுப்பூசித் திட்டத்தை முறையாக அமல்படுத்தவும் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

More articles

Latest article