சென்னை:
கொரோனா நோய் தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக, அவர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பில் 1,400 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியவர், நோயாளிகள் சிசிடிவி கேமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், சிகிச்சை மையத்தில், சிறப்பு மருத்துவ குழு முழுநேரமும் செயல்படும் என்றார்.
பின்னர் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர், கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தவர், இது தொடர்பாக தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளுடன் கலந்து ஆலோசிக்க அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும், அதையும் மீறி கட்டணம் வசூலித்தால், சட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.