சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் மாதம் ஆண்டிறுதி பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் இன்றுமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு இன்று (பிப்ரவரி 20) பிற்பகல் ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மாநில பாடத் திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 20) பிற்பகல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
பொதுத் தேர்வுகளுக்கான தேதி நவம்பர் மாதமே பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி நடந்து முடிந்தது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச் 1ஆம் தேதி தமிழ்,
மார்ச் 5ஆம் தேதி ஆங்கிலம்,
மார்ச் 8ஆம் தேதி கணினி அறிவியல், உயிரி அறிவியல், புள்ளியியல்,
மார்ச் 11ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்,
மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்,
மார்ச் 19ஆம் தேதி கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகின்றன.
அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாளை படித்து பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்க்கவும் எடுத்துக் கொள்ளப்படும். 10.15 மணியில் இருந்து 1.15 மணி வரை மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம்.