பூமிக்கடியில் இருக்கும் வளங்களை அடையாளம் காண பரிசோதனைகள் செய்வது எல்லா அரசும் செய்வது தான்.
அவ்வாறு பரிசோதனை செய்த பிறகு குறைந்த செலவில் நீண்ட காலத்திற்கு அவ்வளங்களை எடுத்து நாட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க முடியுமா என பல கட்ட விவாதங்கள், கூராய்வு செய்து அறிக்கைகள் அதிகாரிகளால் தயாரிக்கப்படுவதும் எந்த அரசு ஆட்சியிலிருந்தாலும் நடப்பது தான்.
அது அந்த ஆட்சியின் குற்றமாகாது. ஆய்வுகள் பரிந்துரைகள் குறிப்பிட்ட ஒரு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் போது ஆட்சியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள், இம்மாதிரியான திட்டத்தால் ஏற்படக் கூடிய தலைமுறை தாண்டிய தாக்கங்களையும், இத்திட்டம் நிறைவேற்றப்படுவதால் பாதிக்கப்படக் கூடிய மக்களின் மறு வாழ்வு போன்றவற்றையெல்லாம் பரிசீலித்து, மிக முக்கியமாக மக்கள் கருத்துக்களை அறிந்து நடக்க வேண்டும்.
அவ்வாறின்றி இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்க, அரசின் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்து வழங்குவது மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமாகவே அமையும்.
இயற்கை வளங்களை அரசே எடுத்து நாட்டு மக்களுக்காக பயன்படுத்தும் திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு சுதந்திர இந்தியாவில் குறைவே.
காரணம் ஆட்சியில் இருந்தவர்கள் மக்கள் நலனையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் சமமாக பாவித்து திட்டங்கள் தீட்டியது தான். அது அணைகள் கட்டுவதாக இருந்தாலும் சரி, இயற்கை வளங்களை எடுப்பதாக இருந்தாலும் சரி. கால மாற்றத்தில் இயற்கை வளங்களை சுரண்டிடும் எண்ணத்துடன் வியாபார நிறுவனங்களுடன் அரசியல்வாதிகள் கை கோர்த்ததால் வந்த வினை தான்.
மக்கள் குரலை நெரித்து மக்கள் விரோதமாக எதிர் கால சந்ததியரை பாதிக்கும் விதமாக நிகழ்வுகள் ஏற்பட வித்திட்டது என்றால் மிகையல்ல. ஒரு நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எவருக்கு இருக்க முடியாது.
ஆனால் மக்களையும், மக்கள் நலனையும் பலி கொடுத்து தான் வளர்ச்சி பெற முடியும் என்றால் அதனை ஏற்க முடியாது. விளை நிலங்களை பாலை நிலங்களாக்கி விட்டால், நாளைய, ஏன் இன்ரைய சந்ததியர் கூட உணவிற்கு என்ன செய்வார்கள். எண்ணெய் இறக்குமதியில் அன்னியச் செலாவணியை சிக்கனம் செய்து உணவை அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வார்களா இந்த அரசு.
ஒரு நாட்டின் குடி மக்கள் பஞ்சமின்றி, உணவுப் பசியின்றி இருப்பதே அந்நாட்டின் மனித வளக் குறியீடுகளில் முக்கிய அம்சம். பசியின்றி இருப்பவனே கல்வி கேள்விகளில் சிறக்க முடியும் என்பது வெள்ளிடை மலை. பசித்த வயிற்றோடு விஞ்ஞானம் பேச முடியாது,
அதற்காக கச்சா எண்ணையைக் கஞ்சியாக குடிக்க முடியாது. தொலைக்காட்சி விவாதங்களில் எந்த அரசு அனுமதி கொடுத்தது என்ற விவாதமும், வளர்ச்சி வேண்டாம் என்றால் போங்கள் என்று வெறுப்புடன், காரணம் அறியாமலே எதிர்ப்பை மக்கள் தெரிவிக்கிறார்கள் என்ற ஆதங்கப் பேச்சும் தான் அரசியல் கட்சியின் பிரதிநிதிகளிடமிருந்து தெறிக்கிறது.
மக்கள் மனதில் உள்ள ஐயப்பாடுகளை நீக்காமல் பஞ்சதந்திரக் கதை நீதி பேசுபவர்களை என்னவென்று சொல்ல. இந்தப் பதிவு நெடுவாசலுக்கானது மட்டுமல்ல, நீண்ட பல வாசல்களுக்கும் சேர்த்தே தான்…
–சந்திரபாரதி