‘ஆடுஜீவிதம்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ருத்விராஜ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் வாடி ரம் பாலைவனப் பகுதியில் நடந்து வந்தது.

ஜோர்டானில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் மூலம் படப்பிடிப்பு குழுவின் ஆரோக்கியம் பற்றிக் கேட்டறியப்பட்டது. அங்கிருந்து திரும்ப முடியாத நிலை இருப்பதால் ஏப்ரல் 10 வரை படப்பிடிப்பைத் தொடர முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜோர்டான் வந்திறங்கும் அனைத்து வெளிநாட்டினரையும் 14 நாட்கள் தனிமையில் வைக்க அந்த அரசு முடிவு செய்ததால், படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த ஒமன் நாட்டைச் சேர்ந்த நடிகர் டாக்டர் தலீப் அல் பலூஷியும், அவரது மொழிபெயர்ப்பாளரும், இன்னொரு நடிகரும் ஜோர்டானிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள திரைப்படச் சங்கத்துக்கு, தங்களது 58 பேர் கொண்ட குழுவை மீட்டுச் செல்லுமாறு உதவி கோரி கடிதம் எழுதியுள்ளார் இயக்குநர் ப்ளெஸ்ஸி, இதுகுறித்து விரிவாகப் பதிவிட்டுள்ளார் நடிகர் ப்ருத்விராஜ்.