தியோகர்
தியோகரில் உள்ள வைத்தியநாதர் கோவிலில் சிவனுக்கு தினமும் கைதிகள் செய்த மலர் கிரீடம் சூட்டப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் உள்ள வைத்தியநாதர் கோவில் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இந்த கோவில் கடந்த 1596 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இந்த ஜோதிர்லிங்கம் ராவணனுக்கு சிவனால் வழங்கப்பட்டது எனவும் அதை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதை விரும்பாத தேவர்கள் அர்ச்சகர் வேடத்தில் வந்து அதை ராவணன் கீழே வைக்கும்படி செய்ததாகவும் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.
இந்த கோவிலுக்கு அருகே ஒரு சிறைச்சாலை அமைந்துள்ளது. தினமும் அந்த சிறைக் கைதிகள் நாக மகுடம் என்னும் மலர் கிரீடத்தைச் செய்து கோவிலுக்கு அனுப்புகின்றனர். இதை சிறை அதிகாரி சிறையில் இருந்து கால் நடையாக எடுத்து வந்து ஒவ்வொரு மாலையிலும் கோவிலுக்கு அளிக்கிறார். இந்த மகுடம் சூட்டிய பிறகே சிவனின் அலங்காரம் நிறைவு பெறுகிறது. அடுத்த நாள் வரை இந்த மகுடம் நீக்கப்படுவது இல்லை.
கடந்த 1911 ஆம் வருடம் அப்போதைய காவல்துறை ஆணையாளராக இருந்த டைலர் என்னும் ஆங்கிலேயரின் மகன் நோய்வாய்ப்பட்டுள்ளார். அவரை யாராலும் குணப்படுத்த முடியவில்லை. அப்போது ஒரு சாது அவரிடம் வைத்தியநாதர் கோவிலுக்குச் சென்று பூஜை செய்யக் கூறி உள்ளார். அவர் பூஜை செய்து மகன் குணமாகிஉள்ளர். அதன் பிறகு டைலர் தனது ஆளுகைக்கு உட்பட்ட தியோகர் சிறையில் இருந்து கோவிலுக்கு தினமும் மலர் கிரீடம் செய்து அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த கிரீடத்தைச் செய்யும் 10 கைதிகளில் ஒருவர், “நான் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறேன். இந்த கிரீடம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது. இது ஒரு பாம்பின் முகத்தைப் போல் உள்ளதால் நாக மகுடம் என அழைக்கப்படுகிறது. இதற்கு பூ பறிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து கைதிகளும் குளித்து சுத்தபத்தமாக பூஜைகள் செய்த பின்னரே பணியை தொடங்குகின்றனர். இதற்காக எங்களுக்கு ரூ.91 தினக்கூலி வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்