அன்று வழக்கம் போல் தனது பணிகளை முடித்துவிட்டு உறங்கச் சென்ற அமெரிக்காவின் ப்ரைஸ்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் டங்கன் ஹால்டனுக்கு நாளைய விடியல் தனக்கு மாபெரும் பரிசளிக்கப்போகிறது என்பது அப்போது தெரியாது.
ஆழந்த உறக்கத்திலிருந்தவரை கலைத்து விட்டிருக்கிறது அருகேயிருந்து அலறிய அலைபேசி. அரைகுறை தூக்கத்தில் எடுத்து பேசியவரை எதிர் முனையில் முதலாவதாக வாழ்த்தியிருக்கிறது. “நாங்கள் ஸ்வீடனில் இருந்து பேசுகிறோம். இவ்வாண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற தாங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள். ”
அதற்கு பின்னர் தூக்கம் வருமா? ஆனாலும் மகிழ்ச்சியுடன் அன்று காலை பல்கலைக்கழகத்துக்கு சென்றிருக்கிறார். மாணவர்களுக்கு அதற்குள் எப்படியோ விஷயம் தெரிந்து அவர் வகுப்பறைக்குள் நுழைய அவரை பலத்த கரகோஷத்துடன் வரவேற்று பாராட்டு மழையில் நனைத்து விட்டார்கள்.
அதெப்படி நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அன்றே வழக்கம்போல வகுப்பெடுக்க சென்றீர்கள் என்று கேட்டதற்கு இது எனது பணி இதை மகிழ்ச்சியுடன் செய்கிறேன் என்று பதிலளிக்கிறார் டங்கன்.
குவாண்டம் கோட்பாட்டின் கீழ் வரும் பருப்பொருள் ஆய்வில் இதுவரை அறியப்படாத மூலக்கூறுகள் (Quantum matter) பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்காக பேரா.டங்கன் ஹால்டனுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை டங்கன் ஹால்டனுடன் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் ஜே.தவ்லெஸ் மற்றும் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக் கழக விஞ்ஞானி ஜே.மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகியோர் பகிர்ந்து கொள்கிறார்கள்.