இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரையும் புகைப்படம் எடுப்பதற்காக நிருபர்கள் துரத்தியதால் அவர்கள் சென்ற கார் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது.
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியபோது புகைப்படக்காரர்கள் தங்களை காரில் துரத்தியதாக இளவரசர் ஹாரியின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்று அவர்கள் வெளியிட்டிருக்கும் தகவலில், இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மற்றும் மேகனின் தாயார் ஆகியோர் சென்ற காரை சுமார் அரை டஜன் வாகனங்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பின்தொடர்ந்தன.
இந்த கார் சேஸிங்கால் “சாலையில் மற்ற ஓட்டுநர்கள், பாதசாரிகள் மற்றும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர்” என்றும் இந்த சம்பவம் “பெரும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“உலகின் பிரபலமானவர்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்ப்பது வழக்கமான ஒன்று என்றபோதும் இதனால் யாருடைய பாதுகாப்பும் கேள்விக்குறியாகக்கூடாது” என்று இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தெரிவித்துள்ளனர்.
ஹாரியின் தாயார், இளவரசி டயானா, 1997 ஆம் ஆண்டு பாரிஸில் இதேபோல் நிருபர்கள் துரத்தியதால் கார் விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.