ஜிமெயில், கூகுள் டிரைவ் மற்றும் டாக்குமென்டுகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் கேலெண்டர் மற்றும் யூடியூப் ஆகியவற்றிலிருந்து சில தரவுகளை அழிக்க புதிய கொள்கை வகைசெய்துள்ளது என்று கூகுள் நிறுவனம் செவ்வாயன்று அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளாக செயல்படாத தனிப்பட்ட கணக்குகளை பாதிக்கும், பாதுகாப்பு அபாயங்களைத் தவிர்க்க, பயனர்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் கூறியுள்ளது.

இந்த செயலற்ற கணக்குகள் இரண்டு-நிலை அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு மற்றும் பழைய அல்லது மீண்டும் மீண்டும் கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

“அதாவது, இந்தக் கணக்குகள் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடியவை, மேலும் ஒரு கணக்கு சமரசம் செய்யப்பட்டால், ஸ்பேம் போன்ற தேவையற்ற அல்லது தீங்கிழைக்கும் உள்ளடக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம்” என்று கூகுள் தயாரிப்பு நிர்வாகத்தின் துணைத் தலைவர் ரூத் கிரிசெலி கூறினார்.

செயலற்ற கணக்குகளை நீக்கும் பணி டிசம்பரில் தொடங்கும் என்று தெரிவித்துள்ள கூகுள், வணிக அல்லது பள்ளி தொடர்பான கணக்குகள் அழிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

நீக்குதல் தொடங்கும் முன், இந்த செயலற்ற கணக்குகளுக்கு மீட்பு தொடர்பான மின்னஞ்சல் மற்றும் அறிவிப்புகள் பலமுறை அனுப்பப்படும் என்று விளக்கமளித்துள்ளது.

கணக்கு துவங்கப்பட்ட பிறகு பயன்படுத்தாமலேயே இருக்கும் கணக்குகள் முதலில் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.