இந்த சேவாதீர்த் வளாகத்தில், பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் என பல அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த புதிய வளாகத்தில் தேவநகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட ‘சேவா தீர்த்’ என்ற பெயர்ப் பலகையும், அதன் கீழே ‘நாக்ரிக் தேவோ பவ’ (குடிமக்கள் கடவுளுக்கு நிகரானவர்) என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.


பிரதமர் எ கையெழுத்திட்ட கோப்புகள் என்னென்ன?
சேவா தீர்த் புதிய கட்டடத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்ட முதல் கோப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.. சேவா தீர்த் என்ற புதிய பிரதமர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள தனது அலுவலகம் சென்றார். முதலில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய பிள்ளையார் சிலைக்கு பூஜை செய்து வணங்கிவிட்டு, தனது இருக்கையில் அமர்ந்து, பெண்கள், இளைஞர்கள் மற்றும் உதவி தேவைப்படக்கூடிய குடிமக்களுக்கான முக்கியமான முடிவுகள் தொடர்பான முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதாவது, சேவா தீர்த் கட்டடத்துக்கு பிரதமர் அலுவலகம் மாறிய நிலையில், சேவையின் உணர்வைப் பிரதிபலிக்கும் முடிவுகள் தொடர்பான முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் பிரதமர் ரஹத் திட்டம்,
லட்சாதிபதி பெண்கள் திட்டத்தின் இலக்கை 6 கோடியாக இரட்டிப்பாக்குதல்,
விவசாய உள்கட்டமைப்பு நிதியை இரண்டு லட்சம் கோடியாக இரட்டிப்பாக்குதல்,
ரூ.10,000 கோடி மூலதனத்துடன் கூடிய புத்தாக்க (ஸ்டார்ட்அப்) இந்தியா நிதி 2.0
உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய புதிய அலுவலகத்தில் அமர்ந்து கையெழுத்திட்டுள்ளார்.
இந்த முடிவுகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் தொடும் வகையிலும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் உதவித் தேவைப்படுவோருக்கானதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான திட்டத்தைத் தொடங்க இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடியாக ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை கிடைக்கும், இதனால் உடனடி மருத்துவ உதவி இல்லாததால் எந்த உயிரிழப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்படுகிறது.
140 கோடி மக்களின் கனவுகளின் பிரதிபலிப்பே சேவா தீர்த்
சேவா தீர்த் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், வரலாறு நமக்கு முன் படைக்கப்படுவதை நாம் காண்கிறோம். 2047ஐ மனதில் கொண்டு சேவா தீர்த்-ல் அடியெடுத்து வைக்கிறோம். சேவா தீர்த், கர்தவ்ய பவன் 1 மற்றும் 2 முக்கியமான மைல்கல். மத்திய அமைச்சகங்கள், பல்வேறு துறைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்தன. தற்போது புதிய அலுவலகங்கள் மூலம் நேரம், செலவு மிச்சம். 140 கோடி மக்களின் கனவுகளின் பிரதிபலிப்பே சேவா தீர்த் என கூறியுள்ளார்.