புதுடெல்லி:
ஆண்டுதோறும் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்போம் என பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி காற்றோடு போனது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணிப்பின்படி, இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் கடந்த பிப்ரவரியில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் வேலை இல்லா திண்டாட்ட விகிதம் 5.9 சதவீதமாக இருந்தது.
தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் 2017 முதல் குறைந்துகொண்டே வருகிறது. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறையக் குறைய, வேலை இல்லா திண்டாட்ட விகிதமும் அதிகரித்து வருவதே இந்தியா சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.
உலகிலேயே இளம் வயதினர் பணியாற்றும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 28 வயதினரும், சீனாவில் 37 வயதினரும், ஜப்பானில் 47 வயதினரும் அதிகம் பணியாற்றுகின்றனர்.
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் வீழ்ச்சியடையும்போது, அது ஆசியாவின் 3-வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவை பெரிதும் பாதிக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இருந்தாலும், இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் முயற்சியாக, மேக் இன் இந்தியா திட்டத்தை மோடி கொண்டு வந்தார்.
இதன்படி, தேசிய அளவில் நுகர்வோர் வரி முறையை அறிமுகப்படுத்துவது, நிறுவனங்களுக்கான திவால் நடவடிக்கை, மற்றும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், இவற்றால் எந்த பயனும் இல்லை என்பதும், வேலைவாய்ப்பு பெருகவில்லை என்பதும் அரசின் ஆவணங்களில் இருந்து தெளிவாகிறது என்று சுட்டிக் காட்டுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.