காசி: உத்தரபிரதேச மாநிலம் காசியில் ஒரு மாதம் நடைபெறும்  காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். வாரணாசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி தொகுதியில் உள்ள வரலாற்று ஆன்மிக ஸ்தலமான  காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், இந்த நிகழ்ச்சி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது.

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது.  நவம்பர் 17ந்தேதி முதல் டிசம்பர் 16ந்தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது.    இந்த நிகழ்ச்சியின்போது,  காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான பல நூற்றாண்டு கால பழமையான நாகரீக தொடர்பை மீண்டும் உயர்ப்பிக்க இதில் கருத்தரங்குகள், கல்வி சார்ந்த உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2 ஆயிரத்து 592 பேர் பயணம் செய்கிறார்கள். முதலாவது ரெயில் நேற்று புறப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் 200 பக்தர்களை காசிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) முறைப்படி தொடங்கி வைக்கிறார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் தொடக்கவிழா நடக்கிறது.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடக்கம்: ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது…