டெல்லி: பிரதமர் மோடி – நாளை (ஜனவரி 2ந்தேதி) தமிழகம் வருகிறார். அவரது பயணத்திட்ட விவரம் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2 ந்தேதி மற்றும் 3ந்தேதி தமிழகம் மற்றும் லட்சத்தீவுகள் பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து, பயணத் திட்டம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமருடன் முதலமைச்சர் ஸ்டாலினும் , கவர்னர் ரவியும் கலந்து கொள்கின்றனர்.
நாளை (ஜனவரி 2ம் தேதி) திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, திருச்சி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். மொத்தம் ரூ.19,850 கோடி மதிப்பிலான ரயில், விமான சேவைகள், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்டிடம் ரூ.1,100 கோடி மதிப்பில் உருவாக்கியுள்ளது. பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வசதிகளுடன் ஒரே நேரத்தில் 3,500 பயணிகள் வரை பயன்படுத்தும் அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. மதுரை முதல் தூத்துக்குடி வரையிலான 160 கிலோமீட்டர் ரயில் பாதையை இரட்டை தடமாக மாற்றுவது உள்ளிட்ட மூன்று ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி இந்த பயணத்தின் போது துவக்கி வைக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 3ம் தேதி லட்சத்தீவிற்கு செல்கிறார். அங்கு அகத்தி பகுதியில் நடைபெறும் பொது விழாவில் அவர் பங்கேற்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து கவரத்தி பகுதியில் தொலைத்தொடர்பு, குடிநீர், சூரிய மின்சக்தி மற்றும் மருத்துவ துறைகள் சார்ந்த திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் திருச்சி சென்றடையும் பிரதமா் மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.
மதியம் 12 மணியளவில், திருச்சியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைப் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா். விமானப் போக்குவரத்து, ரெயில், சாலை, கப்பல், உயா் கல்வி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் தொடா்பான ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் ரூ.1,100 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட புதிய முனையக் கட்டிடத்தை பிரதமா் திறந்து வைக்க உள்ளாா். இந்த 2 அடுக்கு புதிய முனையக் கட்டிடம் ஆண்டு தோறும் 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா் பிரதமா் மோடி. சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூா்-மேட்டூா் அணைப் பிரிவில் 41.4 கி.மீ. இரட்டை ரெயில் பாதை திட்டம், மதுரை-தூத்துக்குடி இடையே 160 கி.மீ. தொலைவிலான இரட்டை ரெயில் பாதை திட்டம், திருச்சி-மானாமதுரை-விருதுநகா் ரெயில் பாதை மின்மய மாக்கல், விருதுநகா்-தென்காசி சந்திப்பு மின்மய மாக்கல், செங்கோட்டை-தென்காசி சந்திப்பு-திருநெல்வேலி-திருச்செந்தூா் ரெயில்பாதை மின்மயமாக்கல் திட்டங்கள் இதில் அடங்கும். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து திறனை மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டில் பொருளாதார வளா்ச்சிக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டங்கள் உதவும்.
ஐந்து சாலைத் திட்டங்கள் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை 81 திருச்சி-கல்லகம் பிரிவில் 39 கி.மீ. நான்குவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 81-ல் கல்லகம்-மீன்சுருட்டி பிரிவில் 60 கி.மீ. 4/2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ல் செட்டிகுளம்-நத்தம் பிரிவில் 29 கி.மீ. நான்குவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 536-ல் காரைக்குடி-ராமநாதபுரம் பிரிவில் 80 கி.மீ. இருவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ-ல் சேலம்-திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையின் 44 கி.மீ. தொலைவு நான்குவழிச் சாலை ஆகியவை இதில் அடங்கும். திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, உத்தரகோச மங்கை, தேவிப்பட்டினம், ஏா்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வா்த்தக நகரங்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு இந்த சாலைத் திட்டங்கள் உதவும்.
தேசிய நெடுஞ்சாலை-332ஏ முகையூா் முதல் மரக்காணம் வரை 31 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை அமைப்பது உள்பட பல்வேறு முக்கிய சாலைத் திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டவிருக்கிறாா். இத்திட்டம், உலகப் பாரம்பரியச் சின்னமான மாமல்லபுரத்துக்கு சாலை இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்கும்.
ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களைப் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா். இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் எண்ணூா்-திருவள்ளூா்-பெங்களூர்-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி பிரிவில் ஐபி 101 (செங்கல்பட்டு) முதல் ஐபி 105 (சாயல்குடி) வரை 488 கிலோ மீட்டா் நீளமுள்ள இயற்கை எரிவாயுக் குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் 697 கி.மீ. தொலைவிலான விஜயவாடா-தருமபுரி மல்டிபிராக்ட் பெட்ரோலிய குழாய் திட்டம் ஆகியவை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படும்.
கெயில் நிறுவனத்தின் கொச்சி-கூத்தநாடு-பெங்களூர்-மங்களூர் எரிவாயுக் குழாய் திட்டம் 2-ன்கீழ் கிருஷ்ணகிரி முதல் கோவை வரை 323 கி.மீ. தொலைவுக்கு இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
சென்னை காமராஜா் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம்-2 (ஆட்டோமொபைல் ஏற்றுமதி, இறக்குமதி முனையம்-2 மற்றும் துறைமுகம் அமைக்கத் தூா்வாரும் கட்டம்-5) நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படவுள்ளது. இது, நாட்டின் வா்த்தகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று ஆகும். சென்னை வல்லூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தரைவழி முனையத்திற்கான பொது வழித்தடத்தில் மல்டிபிராக்ட் குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். ரூ. 400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த உலை ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டதாகும்.
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) 500 படுக்கைகள் கொண்ட மாணவா் விடுதியும் திறந்துவைக்கப்படவுள்ளது.
பின்னா், பிற்பகல் 3.15 மணியளவில் லட்சத்தீவின் அகத்தி தீவுக்கு செல்லும் பிரதமா் அங்கு பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறாா். ஜனவரி 3-ந்தேதி லட்சத்தீவின் கவரத்தியில் ரூ.1,150 கோடி மதிப்பில் தொலைத்தொடா்பு, குடிநீா், சூரிய சக்தி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் தொடா்பான பல வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.