டில்லி:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல், இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பொது பட்ஜெட் மற்றும் மாநில வளர்ச்சி குறித்து பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
டில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, பாஜக கட்சி தலைவர் அமித்ஷா உள்பட மூத்த அமைச்சர்கள், முக்கிய கட்சி நிர்வாகிகள் உள்பட பாஜ மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
இன்றைய கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர், இளைஞர்கள், மகளிர்களுக்கான மத்திய- மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது, சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்தலாமா என்பது குறித்தும் கருத்து கேட்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்றைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அந்த மாநிலங்களில் கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.