அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் வருடாந்திர குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.

செப்டம்பர் 21ம் தேதி டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்வார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு குவாட் உச்சி மாநாட்டை நடத்துவது இந்தியாவின் முறை என்ற போதும் இதை நடத்த அமெரிக்கா கேட்டுக்கொண்டதை அடுத்து 2025ம் ஆண்டு இந்த கூட்டத்தை நடத்த இந்தியா சம்மதித்துள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், கடந்த ஒரு வருடத்தில் குவாட் அடைந்த முன்னேற்றத்தை தலைவர்கள் மதிப்பாய்வு செய்வார்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நாடுகளின் வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அதே நேரத்தில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி மற்றும் இந்திய அதிகாரிகள் சமீபத்தில் மேற்கொண்ட விறுவிறுப்பான பயணம் மற்றும் அதன் நோக்கம் குறித்தும் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவாட் உச்சி மாநாட்டை அடுத்து செப்டம்பர் 22-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் இந்திய சமூகத்தினரின் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இதையடுத்து செப். 23ம் தேதி ஐ.நா. பொது சபையில் நடைபெறும் ‘எதிர்கால உச்சி மாநாட்டில்’ பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.