பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, பெண்களுக்கான மரியாதை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை காட்டுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில், குற்றவாளிகள் 14 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நிலையில் அவர்களின் நன்நடத்தை காரணமாக அவர்களின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

“டெல்லி செங்கோட்டையின் மீது ஏறி நின்று பேசும்போது பெண்களுக்கு மரியாதை குறித்து பேசுகிறார். ஆனால் நிஜத்தில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறார்” என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “பிரதமரின் வாக்குறுதிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிகிறது. குறிப்பாக பெண்களை மட்டுமே பிரதமர் ஏமாற்றியுள்ளார்” என்றும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை கோத்ரா சிறையில் இருந்து பொது மன்னிப்பு வழங்கி குஜராத் அரசு விடுதலை செய்தது.

ஆனால், அதே நாளில் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது சிறப்பு பேருரையாற்றிய பிரதமர் மோடி, “பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் மற்றும் செயல்களை நாம் சாதாரணமாக பயன்படுத்துகிறோம்.

அன்றாட வாழ்வில் பெண்களை அவமானப்படுத்தும் நடத்தை மற்றும் கலாச்சாரத்தை அடியோடு கைவிட உறுதியேற்போம். பெண்கள் நமது தேசத்தின் சொத்து” என்று மனமுறுக பேசினார்.

அதேவேளையில், பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான உத்தரவுக்கு அனுமதி அளித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பாலியல் மற்றும் கொலை குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் சுபாசினி அலி, சுதந்திர பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரேவதி லால், பேராசிரியர் ரூப் ரேக் வர்மா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 29 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மோடி முதல்வராக இருந்தபோது 2002 ம் ஆண்டு மார்ச் 3 ம் தேதி நடைபெற்ற குஜராத் கலவரத்தில் 19 வயதான கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானு கூட்டு பலதாகாரம் செய்யப்பட்டார் தவிர அவரது மூன்று வயது மகளையும் கொலை செய்தது நினைவிருக்கும். இந்த சம்பவத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.