ராமேஸ்வரம்:

ப்துல் கலாமின் இரண்டாவது  நினைவு நாளான இன்று, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து  கலாம் தேசிய நினைவகத்தையும் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே  பேக்கரும்பு என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த அணுவிஞ்ஞானியும், ஜனாதிபதியுமான  அப்துல் கலாமுக்கு நினைவு மண்டனம் எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்க,  தேசிய நினைவகமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அப்துல் கலாமின் 2வது நினைவுநாளையொட்டி, தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று காலை 11 மணி அளவில் ராமேஸ்வரம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம், அப்துல் கலாம் நினைவிடத்துக்கு சென்றார். அங்கு அப்துல்கலாமுக்கு கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்துக்கு வந்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர்  மணிமண்டபத்தில் உள்ள புகைப்படங்கள், சிற்பங்களை பார்வை யிட்டு நினைவகத்தை பிரதமர் மோடி சுற்றி பார்த்தார். தொடர்ந்து, கலாம் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன்  தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம்  தேசிய நினைவகத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மறைந்த  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பேக்கரும்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இது 16.5 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது. நினைவகத்தின் முகப்பில் கலாமின் 6 அடி உயர முழு உருவ வெண்கல சிலை, ‘அக்னி’ ஏவுகணை, செயற்கைகோள் மாதிரிகள், கலாமின் 700க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 95 ஓவியங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலாம் குடும்பத்தினரும் பங்கேற்றனர். கலாமின் அண்ணனுடன் மோடி சிறிது நேரம்  உரையாடினார்.

.விழாவில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்வர் பழனிசாமி, கோவா முதல்வர் மனோகர் பாரீகர், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யாநாத், கேரள கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்ராதாகிருஷ்ணன், பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.