பெங்களூரு

ரண்டு வருடங்களுக்கு முன்பு பகிரப்பட்ட ஒரு செய்திக்காக அர்னாப் கோஸ்வாமி மேல் கர்நாடகா அமைச்சர் ஜார்ஜ் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

ரவி ஐ ஏ எஸ்

கடந்த 2015ஆம் வருடம் மார்ச் 16 அன்று ஐ ஏ எஸ் அதிகாரியான டி. கே. ரவி மரணம் அடைந்தார்.  இது பற்றி அப்போது டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணி புரிந்த அர்னாப் கோஸ்வாமி ஒரு செய்தித் தொகுப்பை பதிந்திருந்தார். அதில், அப்போது கர்நாடகா அரசில் உள்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் தான் இந்த மரணத்துக்கு காரணம் என்றும், அமைச்சர் சாட்சியங்களை கலைக்க முயல்வதாகவும் அர்னாப் தெரிவித்திருந்தார்.  அதற்காக இப்போது ஒரு மானநஷ்ட வழக்கு ஒன்றை அர்னாப் கோஸ்வாமி மேலும், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மேலும் ஜார்ஜ் தொடர்ந்துள்ளார்.

கர்நாடகா அமைச்சர் ஜார்ஜ்

இது பற்றி ஜார்ஜ் சார்பில் அவர் வழக்கறிஞர் அஜேஷ் குமார் சங்கர் தெரிவித்ததாவது :

”ரவியின் மரணத்துக்கு அடுத்த நாள் அர்னாப் தனது தொலைக்காட்சியில் எந்தவிதமான புலனாய்வும் இல்லாமல் இது ஒரு கொலை என்றும், அதற்கு அமைச்சர் ஜார்ஜ் தான் பொறுப்பு என்றும் சொல்லி இருந்தார். ஜார்ஜ் சாட்சியங்களை கலைக்க முயல்கிறார் எனவும் சொல்லி இருந்தார்.  இந்த கொலைக்கான விசாரணை முடியும் வரை காத்திருந்த அமைச்சர் இப்போது இந்த மானநஷ்ட வழக்கை தொடுத்துள்ளார்” என்றார்.

அமைச்சர் ஜார்ஜ், “ரவியின் மரணம் ஒரு கொலை என்றும், நான் தான் அதற்கு காரணம் என்றும் அர்னாப் கூறினார்.  அவரது நிகழ்வில், எம்பஸி நிறுவனமும், எனது கலாசந்திரா நிறுவனமும் இணைந்து நடத்திய அத்துமீறல்களை ரவி கண்டு பிடித்து விட்டதால் தான் இந்தக் கொலை நிகழ்ந்தது என குறிப்பிட்டிருந்தார்.  விரைவில் இந்த உண்மைகளை வெளியிடுவதாகச் சொன்ன அவர் பின் அதைப் பற்றி சொல்லவில்லை.  இப்போது சிஐடி, மற்றும் சிபிஐ விசாரணை முடிவில் ரவி தற்கொலை செய்துக் கொண்டதாக அறிக்கை வந்துள்ளது.  அந்த மரணத்தில் என் பங்கு எதுவும் இல்லை என விசாரணை முடிவு வரும்வரை காத்திருந்தேன்.  இப்போது இந்த வழக்கை பதிவு செய்துள்ளேன்” எனக் கூறினார்.

மேலும் தன் மனுவில், ”ஆதாரமற்ற புகார்களைக் கூறி எனது கௌரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அர்னாப், மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடந்துக் கொண்டது.  இது நாடெங்கும் பரவி, எனது குடும்பத்தினரும், மற்றும் பொதுமக்களும் என் மேல் சந்தேகப்பட்டு கேள்விகள் கேட்கும் அளவுக்கு ஆனது எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது.  நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நான் கட்டிக் காத்து வந்த என் சுய கௌரவதத்தை கேவலப் படுத்தியது அர்னாபின் பதிவுகள்.  எனது சர்வாங்க நகர் தொகுதியில் என் பெயரைக் கெடுக்க திட்டமிட்டு செய்திகள் பரப்பப்பட்டன” என ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 19 அன்று ஜார்ஜ் தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி உள்ளது.