சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், இன்று  பிரதமர்  மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி  பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பிரதமருடன்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட  கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மோடி வருகையை முன்னிட்டு அப்பகுதியில் சென்னை காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பொதுக் கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதியில் 3,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில்  இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  இதற்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகளின் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் நடைபெற்று வருகின்றன.  ஏற்கனவே ஆளும் கட்சியான தி.மு.க  ஒரு ஆண்டுகளாக களப்பணியில் இறங்கியுள்ள மற்ற கட்சிகள் சமீப காலமாகத்தான் தேர்தல் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளரான பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக   அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்த அணியான டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பியூஷ் கோயல் மற்ற கூட்டணி கட்சிகளான 4 கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார். அதன்படி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜகன் மூர்த்தி மற்றும் வாசன் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து, பா.ஜ.க-வுக்கு ஆலோசனை வழங்கும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எஸ். குருமூர்த்தியையும், பட்டாளி மக்கள் கட்சி  தலைவர் அன்புமணி ராமதாசையும் கோயல் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் வாசன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த அவர் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது, “இரட்டை இயந்திர வளர்ச்சி” என்ற பா.ஜ.க-வின் பரந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று மாலை  பிரதமர் மோடி தலைமையில்  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில்  நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்,  புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பா.ம.க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி  இன்று  கேரளா மற்றும் தமிழ்நாட்டில்  பிரச்சாரம் செய்கிறார்.  இன்று காலை  திருவனந்தபுரத்திற்கு செல்லும் மோடி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூன்று புதிய ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு, அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 23) தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, அங்கு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர்  பிற்பகல் சென்னை வருகிறார்.

சென்னை செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில்  நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியான அ.தி.மு.க உட்பட ஆறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ்நாடு தயாராகிவிட்டது! நாளை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி உரையாற்றுகிறார். 

பிரதமர் மோடி,  எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், தமிழ்நாட்டில் NDA-வின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இது ஒரு வலுவான தொடக்கமாகும்.

ஊழல் மலிந்த திமுக ஆட்சியை வீழ்த்தி, தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்லாட்சி, வேலைவாய்ப்புகள் மற்றும் செழிப்பை வழங்குவதற்கான முதல் படி இதுவே! இந்த முறை, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பிரகாசிக்கும்! 

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

[youtube-feed feed=1]