அகமதாபாத்: பிரதமர் மோடி போட்டியிட்ட குஜராத் மாநிலத்தில் உள்ள மணிநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தமிழ் பள்ளி மூடப்படுவதாக, மாநில அரசு அறிவித்து உள்ளது. இது அங்குள்ள தமிழ் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அங்கு வசிக்கும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில், 8ம் வகுப்பு வரை குஜராத் மொழி கட்டாயம் என சட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு செயல்பட்டு வரும் தமிழ் பள்ளிக்கூடங்கள் மூடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துணிகள் தயாரிப்பில் குஜராத் மாநிலம் புகழ்பெற்றது. இதனால், தமிழகத்தைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே குஜராத் சென்று, அங்கேயே தங்கி நெசவுத் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். லட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு குடும்பத்தோடு வசித்து வருவதால், அவர்களின் பிள்ளைகள் தமிழ் வழியில் படிப்பதற்காக 1970ம ஆண்டு வாக்கில் அங்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, அகமதாபாத் நகராட்சி கல்வி வாரியம் சார்பில் அங்குள்ள பள்ளிகளில், 7ஆம் வகுப்பு வரை தமிழ் வழிப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் தொடங்கப்பட்டு குஜராத் மாநில அரசின் நிதியுதவி பெறும் பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகளை அரசு நடத்தி வந்தது.
ஆனால், கடநத சில ஆண்டுகளாக குஜராத் மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டது முதல், அங்கு தமிழ்வழிக்கும் முக்கியத்துவம் குறைந்துள்ளது. இதனால், தமிழ்வழி நகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது.
இதனால் பள்ளிகள் படிப்படியாக மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அகமதாபாத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அதாவது, தமிழக அரசு தலையிட்டு குஜராத் அரசிடம் பேசி தமிழ்ப் பள்ளிகள் உயிர்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, அவர் போட்டியிட்ட மணி சட்டமன்ற தொகுதியில் உள்ள தமிழ் பள்ளியும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநில அரசின் இந்த நடவடிக்கை, அங்கு வசிக்கும் தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது, தமிழ் வழியில் படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என பெற்றோர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
தமிழ் வழிக் கல்வி பயில்வதற்காக தொடங்கப்பட்ட பள்ளிகள் குஜராத்தில் அடுத்தடுத்து மூடப்படுவதால் உடனடியாக தமிழக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.