பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் இந்த மாதம் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அனல்பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று முதல் 8ந்தேதி வரை 8 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும், ஆட்சியை பிடிக்க பாஜக ஒருபுறமும், மதசார்பற்ற ஜனதாதளம் மற்றொரு புறமும் களத்தில் இறங்கி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், காங்கிரசுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்த இதுவரை பல கட்ட பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார்.  மேலும், மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, பிரசாரத்திற்கு ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட மூத்த தலைவர்கள் களமிறங்க உள்ளனர்.

அதேவேளையில், பாஜகவுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடகாவில் தனி வீடு எடுத்து தங்கி தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில்,  பிரதமர் மோடி இன்று முதல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார். மேலும் மத்திய அமைச்சர்களான  ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, ஸ்மிருதி இரானி, பிரகாஷ்ஜாவதேகர், பியூஷ்கோயல், அனந்த்குமார் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மோடி சுற்றுப்பயணம் விவரம்:

மே 1-ல் (இன்று)  சாமராஜ்நகர், மைசூரு, மண்டியா, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். மே 3-ஆம் தேதி கலபுர்கி, பீதர், யாதகிரி, பெல்லாரி, கொப்பள், பெங்களூருவில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார். மே 5, 7, 8-ஆம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய இருப்பதாக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.