மூத்த பத்திரிகையாளர் –  நண்பர்,  அனாமிகன் நமது அலுவலகத்துக்கு வந்திருந்தார். நிறைய விஷயங்கள் அறிந்தவர். ஆனால் புனைப்பெயர்களிலேயே தனது கட்டுரைகளை வெளியிடுவார். அதென்னவோ, தனது பெயரை வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. ஆகவேதான், “பெயரில்லா மனிதர்” என்று பொருள்படும்படியாக அனாமிகா என்று அழைப்போம். அது பெண்பால் பெயர் போல் இருக்கிறது(!) என்பதால் அவர் அனாமிகன் ஆகிவிட்டார்.
அனாமிகனிடம் பேசிக்கொண்டிருந்தால் சுவாரஸ்யமான தகவல்கள் கொட்டும். காவிரி விவகாரம் பற்றி பேச்சு ஓடியது. முன்னாள் பிரதமர் தேவகவுடா, காவிரி விவகாரத்தில் காட்டும் அதீத கன்னட பாசம் பற்றியும் பேசினோம்.

கிருஷ்ணராஜசாகர் அணை
கிருஷ்ணராஜசாகர் அணை

கிருஷ்ணராஜ சாகர் அணைக்குச் சென்று பார்வையிட்ட தேவகவுடா, “தமிழகத்துக்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட தரக்கூடாது” என பேசியிருக்கிறார். இதே கருத்தை, பிரதமர் மோடியை சந்தித்து சொல்லியிருக்கிறார். கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இதே போல பேசியவர், “முதல்வர் சித்தராமையா அவர்களே.. தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தராதீர்கள். உங்கள் ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீமன்றம் சொல்வது வரம்பு மீறிய செயல்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போது “இதே காவிரிக்காக ஓவராக பேசி, அதனால் பதவியை இழக்க நேரிடுமோ என்று பயந்துபோய் தான் போட்ட வழக்கை வாபஸ் வாங்கினார் தேவகவுடா. தெரியுமா” என்றார் அனாமிகன்.
தேவகவுடா
தேவகவுடா

“விளக்கமாச் சொல்லுங்கள்..” என்றேன்.
அனாமிகன் விவரிக்க ஆரம்பித்தார்:
“நான் சொல்வது 1995 – 96 களில் நடந்தது. அப்போது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதற்கு, சித்தகோஸ் முகர்ஜி நடுவராக இருந்தார். அவர் தமிழ்நாடிற்கு வந்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி படுகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். விவசாயிகளை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்பது, பாசன பகுதிகளை பார்வையிடுவதுதான் அவரது பயணத்தின் நோக்கம்.
அவருக்கு டெல்டா விவசாயிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள். சாலைகளின் ஓரங்களில் நின்று, எங்கள் கண்ணீர் கதையைக் கேளுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். சித்தகோஸ் முகர்ஜி கோயில்களுக்குச் சென்றபோது பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அப்போது கர்நாடக முதல்வராக இருந்தவர் தேவகவுடா. அவர், கர்நாடக உயர்நீதி மன்றத்தில்.. அதாவது பெங்களூரு உயர்நீதி மன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.
“காவிரி நடுமன்ற தலைவர் சித்தகோஸ் முகர்ஜிக்கு தமிகத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. கோயில்களில் பூரணகும்ப மரியாதை செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே அவர் தமிழகத்துக்கு சார்பாகத்தான் செயல்படுவார். அவரதை காவிரி நடுவர் மன்ற பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்பதுதான் தேவகவுடா அளித்த மனுவின் கருத்து.
அந்த மனுவில் தமிழ்நாடு, பாண்டி, கேரளா ஆகிய மாநில அரசுகளையும் பார்ட்டியாக சேர்த்தார் தேவகவுடா.
இந்த மனு நிலுவையில் இருந்தபோதே தேவகவுடா, பிரதமர் ஆகிறார்..!” என்று சொல்லி நிறுத்திய அனாமிகன், மேஜையில் இருந்த டம்ளரை எடுத்து ஒரு மிடறு தண்ணீர் குடித்தார்.
நான், “சரி, இதில் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எங்கு வந்தார்” என்றேன்.
அனாமிகன் தொடர்ந்தார்:
“அப்போது இந்திய அளவில் பொதுத் தேர்தலும், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்திருந்தது. அப்போது மதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். ம.தி.மு.க.வில் போட்டியிட்டவர்களிலேயே அதிக வாக்கு பெற்றிருந்தவர் அவர்தான். சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல.. புள்ளி விபரப்புலி. பல்வேறு பொது விசயங்களில் தானாக முன்வந்து வழக்குகள் தொடுத்து நல்ல விளைவுகள் ஏற்பட காரணாக இருந்தவர். அவர் வெற்றிபெறாமல் போனது பலருக்கும் வருத்தம்.
கே.எஸ். ராதாகிருஷ்ணன்
கே.எஸ். ராதாகிருஷ்ணன்

இந்த வருத்தமான சூழலில் கோவில்பட்டியில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். காரில் வரும்போது, செய்திகள் கேட்கிறார். பிரதமராக தேவகவுடா தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி ஒலிபரப்பாகிறது.
உடனே அவருக்குத் தோன்றுகிறது. “காவிரி நடுவர் மன்ற தலைவரான சித்தகோஸ் முகர்ஜி, தமிழகத்துக்கு  சார்பாக ஒருதலைபட்சமாக நடப்பார் என்பதால் அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கர்னாடகத்துக்கு சார்பாக மனு கொடுத்தவராயிற்றே தேவகவுடா. அவர் எப்படி ஒட்டுமொத்த தேசத்துக்கு பிரதமர் ஆக முடியும்” என்று நினைத்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
சென்னை வந்தவுடன், முதல்வேளையாக, உயர்நீதி மன்றத்தில், quowarant  மனு தாக்கல் செய்கிறார். அதாவது, “கர்நாடகத்துக்காக ஒரு சார்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த தேவகவுடா, பிரதமராக பதவி ஏற்க தகுதியில்லாதவர்” என்புதான் மனுவின் சாராம்சம்.
தேவகவுடா, மத்திய அரசின் கேபினட் செகரட்டரி, கர்நாடாக அரசு, தமிழக, பாண்டி,  கேரளா மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பறக்கிறது.
அலறிவிட்டார் தேவகவுடா. வாராது வந்த மாமணிபோல் வந்ததல்லவா பிரதமர் பதவி. அவர் மட்டுமல்ல.. அனைத்து கட்சிகளுமே அதிர்ந்து போய்விட்டன. ஏனென்றால் அந்த (1996) பொதுத் தேர்தலில் ஏற்கெனவே மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருந்தது. பா.ஜ.க.வும் போதிய இடங்களைப் பெறவில்லை. அந்த இக்கட்டான சூழலில்தான் புதிதாக உருவான ஐக்கிய முன்னணி சார்பில் தேவகவுடா பிரதமர் ஆனால்.  ஐக்கிய முன்னணி என்பதே பல கட்சி கூட்டணி. அதில் படாதபாடுபட்டு பிரதமரானால், இப்படி ஒரு சிக்கலா என்று தவித்துப்போய்விட்டார் தேவகவுடா!” என்றார் அனாமிகன்.
“அடுத்து என்ன செய்தார்..”
“காவிரி பிரச்சினைதான் முக்கியம். பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றா சொல்வார்?
அன்று காலையில் உயர்நீதிமன்றத்தில் தேவகவுடாவுக்கு எதிராக மனுதாக்கல் செய்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். அன்று மதியம் ஒரு மணிக்கு கவுடாவுக்கு நோட்டீஸ் போகிறது. அவசர அவசரமாக, தேவகவுடா ஒரு விசயத்தைச் செய்தார். அதாவது, ஏற்கெனவே காவிரி நடுவர் மன்ற தலைவர் சித்தகோஸ் முகர்ஜிக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தான் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றார். இதையடுத்து பிரதமர் பதவி பறிபோகாமல் பார்த்துக்கொண்டார்!” என்று சொல்லி சிரித்தார் அனாமிகன்.
“அருமையான தகவலைச் சொல்லியிருக்கிறீர்கள்.. வழக்கம்போலவே” என்று அனாமிகனை பாராட்டினேன். அடுத்ததாக கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு போன் செய்தேன்.
“அய்யா..  தேவகவுடாவையே மிரட்டியிருக்கிறீர்களே..” என்றேன். பழைய நினைவுகளுக்குள் மூழ்கிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன், “ஆம்… தேர்தல் தோல்வியால் மனம் வருந்தி சென்னை திரும்பிக்கொண்டிருந்தேன். திருச்சி காவிரி பாலம் அருகில் வரும்போது, ரேடியோவில் தேவகவுடா பிரதமரான செய்தியைச் சொன்னார்கள். உடனே, அவர் ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றம் குறித்து வழக்கு தொடுத்தது நினைவுக்கு வந்தது. சென்னை வந்த பிறகு உடனடியாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்” என்றார்.
மேலும் அவர், “தற்போதும் தனது தகுதிக்கு குறைவான செயலையே தேவகவுடா செய்துவருகிறார். இப்போது அவர் பிரதமர் இல்லை என்றாலும், முன்னாள் பிரதமர் என்ற சலுகையை அனுபவிக்கிறார். அப்படிப்பட்டவர் தேசம் முழுதுக்குமே பொதுவானவர். இந்த நிலையில் கர்நாடகத்துக்காக ஒரு சார்பாக அவர் செயல்படுவது தவறு. ஆகவே அவரது “முன்னாள் பிரதமர்” என்ற சலுகையை பறிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்க இருக்கிறேன்” என்றார்.
ஆக, அதீதமாய் பேசும் தேவகவுடாவுக்கு மீண்டும் வாய்ப்பூட்டு போடப்போகிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.