மதுரை: டாஸ்மாக் கடைகளில், விலைப்பட்டியல் வைக்க வேண்டும், விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. மேலும், விலை விவரங்கள் தெரிவிக்கப்படுவது இல்லை என்றும் குடி மகன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா, உயர் நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்குவதில்லை. ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 வரை அதிகமாக வசூலிக்கின்றனர். பல டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்களும் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டும் ரசீது வழங்குவதில்லை. எனவே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக கட்டணம் வாங்கவும், போலி மதுபான விற்பனைக்கு தடை விதித்தும், மதுபான விற்பனைக்கு கம்யூட்டர் ரசீது வழங்கவும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திப்பட்டிருந்தது.
இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் நடைபெற்றது. அப்போது, டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனைக்கு ரசீது கொடுக்க வேண்டும் என விதிகளில் உள்ளது. இருப்பினும் இந்த விதியை பின்பற்றி ரசீது வழங்குவதில்லை. மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் மது பானங்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டனர்.
மேலும், ஒவ்வொரு கடைகளின் முன்பு மதுபானங்களின் விலை பட்டியல் அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும். மதுபான விற்பனை ரசீது ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். இந்த உத்தரவு டாஸ்மாக் கடைகளில் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத டாஸ்மாக் ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன், இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் பிப். 6-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.