டில்லி,
ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த வாரம் அறிவிக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதனால் ஜூன் முதல் வாரத்தில் இருந்து ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் பாரதியஜனதா கட்சி சார்பில் புதிய ஜனாதிபதியாக ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி ஒருவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் அனைவரும் இணைந்து மாற்று வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன.
இது சம்பந்தமாக அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி போன்றோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தாவும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கி உள்ளார். அடுத்த வாரம் வியாழக்கிழமை அவர் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட் நாயக்கை சந்தித்து பேச உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்த யோசிக்கப்பட்டது. ஆனால், அவர்நலக்குறைவு காரணமாக மறுத்து விட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மீரா குமாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாமா என்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
விரைவில் எதிர்க்கட்சிகள் சார்பாக பலம் வாய்ந்த வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.