டில்லி

காராஷ்டிர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கம் குறித்து மத்திய அரசுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.   அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான பாஜகவுக்கு அக்கட்சியின் கூட்டணிக் கட்சியான சிவசேனா ஆதரவு அளிக்காததால் அரசு அமைக்க மறுத்துள்ளது.   சிவசேனாவுக்கு போதிய ஆதரவு காட்டவில்லை எனக் கூறி அரசு அமைக்க ஆளுநர் கால அவகாசம் அளிக்கவில்லை.

அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநர் அக்கட்சிக்கும் கால அவகாசம் அளிக்காமல் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை  அமல்படுத்தப் பரிந்துரை செய்துள்ளார்.   இதற்கு  பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   சிவசேனா கட்சி தங்களுக்கு அவகாசம் அளிக்க ஆளுநர் வேண்டுமென்றே மறுத்ததாகக் குற்றம் சாட்டி வருகிறது.

மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களிடம், “எனக்கு மத்திய உள்துறை அமைச்சரைப் போல் அனுபவம் கிடையாது.,   ஆம் அவர் மாநில அரசுகளை உடைப்பதில் மிகவும் அனுபவம் உள்ளவர்.   கோவா மற்றும் கர்நாடகாவில் அவர் அரசைக் கவிழ்த்ததை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.   அதைப் போல் மகாராஷ்டிராவில் குதிரைப்பேரம் நடத்த வசதியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

சட்டப்பேரவை உறுப்பினர்களை எங்கு எவ்வாறு மறைத்து வைக்க வேண்டும், எந்த விடுதிகளை இதற்குப் பயன்படுத்த வேண்டும் எனபனவற்றில் நாங்கள் அமித்ஷாவைப் போல் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லை.    நாங்கள் இத்தகைய நிகழ்வுகளை பாஜக செய்வதை ஏற்கனவே கண்டுள்ளதால் எங்களது வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.

மகாராஷ்டிர ஆளுநர் பாஜகவுக்கு  ஆட்சி அமைக்க 2 வார அவகாசம் அளித்தார்.   அவர் பாஜகவுக்கு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்திருக்க வேண்டும்.    ஆனால் மற்ற கட்சிகளுக்கு 14 முதல் 18 மணி நேர அவகாசம் மட்டுமே கொடுத்து விட்டு ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை செய்தது சரியானது இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.