சென்னை:

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க இன்று மாலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வரும் நிலையில், இன்று பிற்பகல் அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களுக்கு 4 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

2 நாட்கள் பயணமாக இன்று பிற்பகல் 2.10 மணிக்கு டில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பழைய விமானநிலையதில் இறங்கி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறாா். அங்கு அத்தி வரதா் தரிசணம் செய்கிறாா்.பின்பு ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா்.

பின்னர், விமான நிலையத்தில் இருந்து  குண்டு துளைக்காத காரில் கிண்டி ஆளுநா் மாளிகை வருகிறார். இன்று இரவு அங்கு ஓய்வெடுக்கிறார். அதையடுத்து, நாளை பல்வேறு நபர்களை சந்திக்கும்  குடியரசு தலைவர், நாளை (சனிக்கிழமை)  மாலை  4.35 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் ஆந்திரா மாநிலம் ரேணுகுண்டா புறப்பட்டு செல்கிறாா்.

அதைப்போல் துணை ஜனாதிபதி வெங்கய நாயுடு 13ம் தேதி சனிக்கிழமை பகல் 12.55 மணிக்கு மைசூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா்.சனி,ஞாயிறு 2 நாட்கள் சென்னையில் இருக்கும் வெங்கய நாயுடு 15 ஆம் தேதி திங்கள் காலை 6.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து தனி விமானத்திலிருந்து தனி விமானத்தில் டில்லி செல்கிறாா்.

ஜனாதிபதி,துணை ஜனாதிபதி ஆகியோா் வருகையையொட்டி சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குடிரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் அத்திவரதரை தரிசிக்கும் நேரங்களில், பொதுமக்களின் தரிசனம் கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இன்று பிற்பகல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க உள்ள நிலையில், அங்கு மதியத்திற்கு மேல்  பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.