காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் சாமி தரிசனம்செய்தார்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த 1ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. 12வது நாளான  இன்று, அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி தரிசனம் அளித்தார்.  காலை முதலே திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவிலுக்கு வருவதை தொடர்ந்து, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்தடைந்தார்.  காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிக்காப்டர் தளத்தில் இறங்கி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் வரதராஜப் பெருமாள் கோவில் வந்த குடியரசுத் தலைவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பட்டாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கினர்.

தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்த குடியரசுத் தலைவர், கோவில் வரலாற்றையும் அத்தி வரதர் வரலாற்றையும் கேட்டறிந்தார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அத்திவரதரின் பழைய மற்றும் புதிய புகைப்படங்கள் பரிசளிக்கப்பட்டன.

குடியரசுத் தலைவருடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி காஞ்சிபுரம் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.