காந்திநகர்: குஜராத் தீவிரவாத மற்றும் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை, குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா, அறிவித்திருக்கிறார். குஜராத் மாநிலம், காந்தி நகரில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கும் இந்த மசோதா முன்னதாக குஜராத் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதா என்று பெயரிடப்பட்டு வந்தது. அதன் பிறகு, இந்த மசோதா 2004ம் ஆண்டில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

(2004ம் ஆண்டில் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவர் இப்போது பிரதமராக இருக்கும் மோடி). ஆனால் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, 2015ம் ஆண்டு மசோதாவுக்கு பெயர் மாற்றப்பட்டது.

குஜராத் தீவிரவாத மற்றும் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதா என்று  பெயரிடப்பட்டது. ஆனால், அதில் முக்கிய அம்சமாக, தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு, நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ ஆதாரமாக சமர்ப்பிக்கும் சர்ச்சைக்குரிய பிரிவு நீக்கப்படவில்லை.

மேலும், காவல்துறை அதிகாரி முன் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஆதாரமாக, சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றார். முன்னதாக, இந்த சட்டம் பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் 2015ம் ஆண்டில் நிறைவேறியது.